ஈரோடு மாநகர் பகுதியில் இரவில் வெளுத்து வாங்கிய மழை


ஈரோடு மாநகர் பகுதியில் இரவில் வெளுத்து வாங்கிய மழை
x
தினத்தந்தி 9 Oct 2020 11:58 PM GMT (Updated: 9 Oct 2020 11:58 PM GMT)

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது.

ஈரோடு,

வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனினும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.

வெளுத்து வாங்கிய மழை

இதைத்தொடர்ந்து மாலை வானில் கருமேகங்கள் தோன்றின. இரவு 8.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சிறிது நேரத்தில் வலுப்பெற்று கன மழையாக வெளுத்து வாங்கியது.

இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதைத்தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் ஈரோடு வீரப்பன்சத்திரம், பெரிய வலசு, கருங்கல்பாளையம், நாடார் மேடு, பன்னீர்செல்வம், பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

சேறும் சகதியுமாக...

சில இடங்களில் சாக்கடை கழிவு நீருடன் மழை நீர் சேர்ந்து ஓடியது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது.

ஈரோடு மாநகர் பகுதியில் மின் கேபிள் பதிக்கும் பணி, பாதாள சாக்கடை பணி, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாத இடத்தில் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் மக்கள் நடந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். மழை காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

Next Story