அறந்தாங்கியில், ஓட்டல் - 2 கடைகள் தீயில் எரிந்து நாசம்; ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம் - தீயணைப்பு பணியின்போது, சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு


அறந்தாங்கியில், ஓட்டல் - 2 கடைகள் தீயில் எரிந்து நாசம்; ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம் - தீயணைப்பு பணியின்போது, சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 11:00 PM GMT (Updated: 10 Oct 2020 2:11 AM GMT)

அறந்தாங்கியில் ஓட்டல்- 2 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு பணியின்போது, சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அறந்தாங்கி,

அறந்தாங்கி வடகரை முருகன் கோவில் அருகே அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. அதன் அருகே சோமு என்பவர் பெட்டிக்கடையும், கஜேந்திரன் என்பவர் டீக்கடையும் நடத்தி வருகின்றனர்.

இவைகள் மூன்றும் ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று கடைகளில் இருந்து புகை வந்தது. தொடர்ந்து தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. தீ வேகமாக பரவி ஓட்டல் மற்றும் 2 கடைகளும் பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று ஓட்டலில் உள்ள ஒரு சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து, மேல்நோக்கி பறந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வெடித்த சிலிண்டர் சாய்ந்த மாதிரி வெடித்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில் போட்டி காரணமாக யாராவது தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story