தொழில் நஷ்டம் காரணமாக மதுரையில் நகைக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை


தொழில் நஷ்டம் காரணமாக மதுரையில் நகைக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Oct 2020 4:00 AM IST (Updated: 10 Oct 2020 8:29 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் தொழில் நஷ்டம் காரணமாக நகைக் கடை அதிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை,

மதுரை மணிநகரம், கனகவேல் காலனியை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 60). இவர் தெற்காவணி மூல வீதியில் நகைக்கடை நடத்தி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்களாக அவர் நகைக்கடையை திறக்கவில்லை.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடையை திறந்த பிறகு எதிர்பார்த்த வியாபாரம் ஆகவில்லை. எனவே தொழிலுக்காக கடன் கொடுத்தவர்கள் அவரை தொந்தரவு செய்ய தொடங்கினர். மேலும் அவரிடம் கடனுக்கு நகை வாங்கியவர்களும் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இது குறித்து நேற்று முன்தினம் இரவு ரெங்கநாதன் தனது மனைவி, மகன், மகளிடம் புலம்பி உள்ளார். அவர்களும் எல்லா பிரச்சினைகளும் சரியாகி விடும் என்று அவரை தேற்றிவிட்டு தூங்க சென்றனர். பின்னர் நள்ளிரவில் ரெங்கநாதன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திலகர்திடல் போலீசார் அங்கு விரைந்து சென்று ரெங்கநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெங்கநாதனின் கடையில் இருந்த நகைகள் திருட்டு போயின. இது குறித்து தெற்குவாசல் போலீசில் வழக்கு உள்ளது. அன்றைய தினத்தில் இருந்து அவர் கடன் வாங்கி தொழில் செய்து வந்ததால் அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

நகைக்கடை அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story