திருப்புவனத்தில், உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணி - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
திருப்புவனத்தில் உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
திருப்புவனம்,
திருப்புவனத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் உயர் மின்னழுத்த பாதை அமைப்பதற்கான பணி தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் உயர்மின்னழுத்த பாதை அமைக்க பணியை தொடங்கி வைத்து பேசியதாவது:- திருப்புவனம் நகர் பகுதியில் வார்டு எண்- 16 மற்றும் 17 ஆகிய பகுதி அதிக மக்கள் வசிக்கும் இடமாகவும், தொழில் துறை இடமாகவும் இருந்து வருகிறது. இந்த பகுதிக்கு ஊரக பகுதியில் இருந்து வரும் மின்சாரம் குறைந்த அழுத்தம் காரணமாக அவ்வப்போது மின்தடை ஏற்படும் நிலை இருந்து வந்தது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிஅடைந்து வந்தனர். இப்பகுதி மக்கள் இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தற்போது மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மூலம் அரசு மின் பகிர்மான கழகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு இப்பகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் மற்றும் நானும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வார்டு எண் 16 மற்றும் 17-க்கு உயர் மின்னழுத்த பாதை அமைக்க கோரிக்கை விடுத்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் ரூ.47லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணியை தொடங்க உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் இந்த பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும். மேலும் இந்த பணியை மின்வாரிய அதிகாரிகள் விரைந்து முடித்து பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களாகிய நீங்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர்.செந்தில்நாதன், சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ், உதவி செயற்பொறியாளர் உலகப்பன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) மாடசாமிசுந்தர்ராஜ், செயல் அலுவலர் சந்திரகலா, சமூக ஆர்வலர் அயோத்தி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சோனைரவி, கணேசன், மாவட்ட வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் அழகுமலை, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச் செயலாளர் புவனேந்திரன், மானாமதுரை வடக்கு ஒன்றிய செயலாளர் சிவசிவஸ்ரீதரன், திருப்புவனம் யூனியன் முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், தாசில்தார் மூர்த்தி, மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், யூனியன் ஆணையாளர் ரெத்தினவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதசுந்தரம், வயல்சேரி ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story