பேரையூர் மாணவரின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை - ஐகோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரையூர் வாலிபரின் உடல் 21 நாட்களுக்கு பிறகு ஐகோர்ட்டு உத்தரவுப்படி தோண்டி எடுக்கப்பட்டு மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
உசிலம்பட்டி,
பேரையூர் தாலுகா ஆத்தாங்கரைப்பட்டி வாழைத்தோப்பை சேர்ந்தவர் இதயக்கனி. இவர் அதே ஊரை சேர்ந்த தனது உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வந்தார். பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதற்காக வெளியூருக்கு அழைத்துச் சென்றார்.
இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் சாப்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் இது தொடர்பாக இதயக்கனியின் சகோதரரான பாலிடெக்னிக் மாணவர் ரமேஷை கடந்த மாதம் 16-ந்தேதி இரவு விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் அவர் அருகில் உள்ள பெருமாள்குட்டம் மலைப்பகுதியில் ஒரு மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து அவரது உறவினர்களும், கிராம மக்களும் ரமேஷின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி ஆத்தாங்கரைப்பட்டி கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து சாப்டூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பரமசிவம் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் ரமேஷின் சகோதரர் சந்தோஷ் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ரமேஷின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து நேற்று அணைக்கரைப்பட்டி மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ரமேஷின் உடல் 21 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது. நெல்லை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் செல்வம், முருகன், பிரசன்னா, தடயவியல் முதன்மை மருத்துவர் மதிகரன் ஆகியோர் தலைமையில் ரமேஷின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை மதுரை ஐகோர்ட்டு கிளையில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையொட்டி குற்றப்பிரிவு டி.ஜி.பி நாகராஜன், பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படும் ரமேஷின் உடல் 21 நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story