பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்புக்கு எதிர்ப்பு: கோவையில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் - திரளானவர்கள் பங்கேற்பு


பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்புக்கு எதிர்ப்பு: கோவையில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் - திரளானவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Oct 2020 4:00 AM IST (Updated: 10 Oct 2020 8:59 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பை எதிர்த்து கோவையில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

கோவை,

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு கடந்த மாதம் 30-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் கோவையில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் 9-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர் தலைமை தாங்கி பேசினார். ஒருங்கிணைப்பாளர்கள் இனாயத்துல்லா, சாதிக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தியவாறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஜே.எஸ்.நவ்புல், எஸ்.டி.பி.ஐ. மாநில பொருளாளர் அபுதாஹீர், அப்துல்ரகுமான், உமர், ஜலாலுத்தீன் இம்தாதி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-

கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தற்போது லக்னோ நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதை எதிர்பார்த்த சமூகத்துக்கு பேரதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. எனவே இதை நீதியற்ற அநீதியான தீர்ப்பாகவே இந்திய மக்கள் பார்க்கின்றனர். இந்த தீர்ப்பை கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்புகள் கண்டிப்பதுடன் புறக்கணிக்கிறது.

மேலும் அநீதியான இந்த தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் நீதித்துறையில் உள்ள நீதிபதிகள் அரசின் நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அல்லது பதவி ஆசை காட்டப்பட்டு பணியவைக்கப்படுகிறார்கள். இதனால் தீர்ப்புகள் நீதி அல்லாத அநீதியான தீர்ப்பாக வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்து, வெல்பேர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ. கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு, பாப்புலம் பிரண்ட் ஆப் இந்தியா, ஏகத்துவம் முஸ்லிம் ஜமாத், நாம்தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் உணர்வாளர்கள், திராவிட அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

Next Story