மாணவி கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்: 4 ஆயிரம் சலூன் கடைகளை அடைப்பு


மாணவி கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்: 4 ஆயிரம் சலூன் கடைகளை அடைப்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 10:00 PM GMT (Updated: 10 Oct 2020 3:45 AM GMT)

மாணவி கொலைக்கு நீதி கேட்டு கோவையில் 4 ஆயிரம் சலூன் கடைகள் அடைத்து போராட்டம் நடைபெற்றது.

கோவை,

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டார். அந்த மாணவியின் கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கோவை மாவட்டத்தில் நேற்று சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து மாநகர் மாவட்ட தலைவர் ராமசாமி கூறியதாவது:-

கோவை மாநகர மாவட்ட பகுதிகளில் 1,500 சலூன்கடைகள், புறநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தில் 2 ஆயிரம் சலூன் கடைகள், பிற சங்கங்களை சேர்ந்த கடைகள் என கோவை மாவட்டம் முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சலூன் கடைகள் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் சவரத்தொழிலாளர் சமுதாயத்தை சேர்ந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத் தியும், மாணவியின் கொலைக்கு நீதி கேட்டும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகள், அழகு நிலையங்களை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். நேற்று காலையில் இருந்தே யாரும் கடைகளை திறக்கவில்லை.

மேலும் கடைகள் முன்பு கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தோம். இதுதவிர கண்டன வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரும் கடைகள் முன்பு ஒட்டப்பட்டு இருந்தது. அந்த ஸ்டிக்கரில், மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, மின்சாரம் பாய்ச்சி கொன்ற நபரை விடுதலை செய்தது கண்டிக்கத்தக்கது. அந்த நபருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று எழுதப்பட்டு இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாவட்ட மருத்துவர் சங்கத்தினர் சார்பில் கலெக்டர் ராஜாமணியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Next Story