முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்ற கூட்டத்தில் முடிவு


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்ற கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 11 Oct 2020 4:30 AM IST (Updated: 11 Oct 2020 12:50 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவில்பட்டி, 

தூத்துக்குடிக்கு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறார். அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், பல்வேறு திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில், கோவில்பட்டி பயணியர் விடுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலையில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள் தலைமை தாங்கினார். சின்னப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ பேசினார்.

கூட்டத்தில், அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அனைத்து அணிகளின் சார்பிலும் பிரமாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் தொல்லியல் துறை முதுகலை பட்டய படிப்பு சேர்க்கையில் தமிழ் மொழியில் படித்தவர்களையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் திரைப்படங்களில் நடித்ததுடன் சமூக பணிகளிலும் ஈடுபட்டனர். பேரறிஞர் அண்ணா தனது இதயக்கனி என்று எம்.ஜி.ஆரைத்தான் கூறினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் அரசியல் பாடம் பயின்றவர்கள். அவர்களது அருகில் இருந்தே நிர்வாக செயல்பாடுகளை கவனித்தவர்கள். கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா அறிவித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார். அவர் 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை வழங்கி உள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்பது உறுதி.

திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. தற்போது துறைரீதியாக ஆய்வு செய்து வருகிறோம். ஊடரங்கு காலத்திலும் திரைப்படத் துறையினருக்கு அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது. திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளைத்தான் வெளியிட்டுள்ளது. மாறாக திரையரங்குகளை திறக்குமாறு கூறவில்லை. எனினும் திரையரங்கு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரது நலன் கருதி, திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் முடிவு எடுப்பார். அ.தி.மு.க. ஆட்சியில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, வினோபாஜி, போர்டு சாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், துணை செயலாளர் விஜயராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் வேலுமணி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட கவுன்சிலர்கள் தங்க மாரியம்மாள் தமிழ்செல்வன், சந்திரசேகர், கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story