பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திருடப்பட்ட 25 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது
பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திருடப்பட்டு பதுக்கி வைக்கப்பட்ட 25 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரியபாளையம்,
பெரியபாளையம் பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவம் நடைபெற்ற வண்ணம் இருந்தது. இதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி மேற்பார்வையில், பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின்படி, போலீசார் பெரியபாளையம்-கன்னிகைபேர் நெடுஞ்சாலையில் செங்காத்தாகுளம் கூட்டு சாலையில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர்கள் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 23), ராஜ்குமார் (29) பூவரசன் (24) ஆகிய 3 பேர் என்பதும், அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு மோட்டார் சைக்கிள்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், ஆரணி, பெரியபாளையம், வெங்கல், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதை விசாரணையில் அவர்கள் ஒப்புக்கொண்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கொடுத்த தகவலின்படி, பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட 25 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மோட்டார் சைக்கிள்களை உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை போலீஸ் நிலையங்களில் சமர்ப்பித்தால் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று போலீசார் கூறினர்.
Related Tags :
Next Story