புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
சென்னை,
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பாரிமுனை சென்ன கேசவ பெருமாள் கோவில், மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், மாதவப்பெருமாள் கோவில், மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவில், தியாகராயநகர் சிவா விஷ்ணு கோவில், கோயம்பேடு வைகுண்ட வாசப்பெருமாள் கோவில், சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், சைதாப்பேட்டை பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சாமி கோவிலில் வெங்கடேஸ்வரர் சாமி, பத்மாவதி தாயார் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இங்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் புரசைவாக்கம் வெள்ளாளர் தெரு சீனிவாச பெருமாள் கோவிலில் பெருமாள் புஷ்ப அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்திற்குள் உபயதாரர்கள் இன்றி கருட சேவையும் நடந்தது.
Related Tags :
Next Story