கல்பாக்கம் அருகே டாக்டரை மிரட்டி ரூ.5 லட்சம் பறிப்பு; துப்பாக்கி முனையில் 2 பேர் கைது
கல்பாக்கம் அருகே டாக்டரை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்தது தொடர்பாக துப்பாக்கி முனையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கிராமம் பஜார் வீதியில் குமார் என்பவர் தனியாக தங்கியிருந்து கிளினிக் நடத்தி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 33). இவர் குமாரின் கிளினிக்கில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். மூர்த்தி அதே கிராமத்தை சேர்ந்த தன்னுடைய நண்பர்களான சரவணன் (29) கிருபாகரன் (27) ஆகியோருடன் குமாரின் கிளினிக்குக்கு சென்று அவரை அவ்வப்போது மிரட்டி பணம் கேட்டு பெற்றார்.
கடந்த ஆண்டு டாக்டர் குமாரை மிரட்டி தலா 10 சென்ட் நிலத்தை தங்கள் பெயருக்கு எழுதி வாங்கியுள்ளனர். கிருபாகரன் டாக்டரை மிரட்டி ரூ.3 லட்சம் மற்றும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக தெரிகிறது. அடிக்கடி இவர்கள் 3 பேரும் டாக்டரை மிரட்டி பணம் பறித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் டாக்டர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியுள்ளார். இருப்பினும் மூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 7-ந்தேதி டாக்டரை மிரட்டி ரூ.50 ஆயிரம் வாங்கியுள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக பல முறை மிரட்டி ரூ.5 லட்சம் வரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனையடைந்த டாக்டர் குமார் இது குறித்து கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அசோக் சக்ரவர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோர் ஆலோசனைப்படி கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் சக்ரவர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் மூர்த்தி மற்றும் சரவணன் இருவரும் புதுச்சேரியில் இருந்து கூவத்தூரை அடுத்த பரமன் கேணி கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்தத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து நிற்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் இருவரும் 2 கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரை கிராமத்தை நோக்கி ஓடினர்.
அவர்களை பின் தொடர்ந்து போலீசாரும் ஓடினர். குப்பத்துக்கு சென்ற இருவரும் ஒரு ஆட்டுக் கொட்டைகைக்குள் பதுங்கினர். அவர்களை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்த போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பிறகு அவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்து மதுராந்தகம் கிளைச்சிறையில் அடைத்தனர். சரவணன் மீது ஒரு கொலை வழக்கு, மற்றும் கொலை முயற்சி, ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன. தலைமறைவாக உள்ள கிருபாகரன் மீது இரட்டைகொலை வழக்கு, ஆள்கடத்தல் கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாகவும் அவர் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story