நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கை குறைப்பு: தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் தகவல்
தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுத்தேர்தல், இடைத்தேர்தலை, கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாதுகாப்பாக தேர்தலை நடத்துவதற்கு மக்கள் பிரதி நிதித்துவ சட்டம் 1951, பிரிவு 77 விளக்கம் 2-ல் குறிப்பிட்டுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் தொடர்பான நெறிமுறைகளை மாற்றியமைத்துள்ளது.
இதன்படி அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகள் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பதிலாக 30 நட்சத்திர பேச்சாளர்களை மட்டுமே பரிந்துரைக்கலாம். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் 20 பேருக்கு பதிலாக 15 பேரை மட்டும் பரிந்துரைக்கலாம்.
அரசியல் கட்சிகள் இந்த பரிந்துரையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு தேர்தல் அறிவிக்கப்பட்ட 7 நாளில் இருந்து 10 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அரசியல் கட்சிகள் நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்ய அனுமதிகோரும் விண்ணப்பத்தினை மாவட்ட தேர்தல் நிர்வாகத்திடம் குறைந்தபட்சம் 48 மணி நேரத்துக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நெறிமுறைகள் எதிர் வரும் அனைத்து தேர்தல் களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story