தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்களின் நிலையை ஆராய தனி ஆணையம்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்களின் நிலை குறித்து ஆராய தனி ஆணையம் அமைக்கவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
புதுச்சேரி,
உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் புதுவை சுதேசி மில் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முற்போக்கு மாணவர் கழக மாநில செயலாளர் இளவரசன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ரவிக்குமார் எம்.பி., விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், நிர்வாகிகள் செல்வந்தன், எழில்மாறன், கோவி.தொல்காப்பியன், புதுவை பல்கலைக்கழக அம்பேத்கர் மாணவர் சங்க தலைவர் அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் இடையே தற்போது எந்தவித நெருடலும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
கூட்டணி கட்சிகள் மீது தி.மு.க. எந்த கருத்தையும் திணிப்பதில்லை. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை அவர்கள் எதற்காக தெரிவிக்கின்றனர் என்றால், சின்னம்தான் தோல்விக்கு காரணம் என்ற நிலை வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். கூட்டணி கட்சிகளின் மதிப்பை குறைக்கும் வகையில் முடிவு எடுப்பதாக நாங்கள் கருதவில்லை.
ஆனாலும் கூட கடந்த தேர்தலில் நாங்கள் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்று சொன்னபோது எங்கள் உணர்வுக்கு தி.மு.க. மதிப்பளித்தது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் எங்களுக்கிடையே ஒரு நல்ல இணக்கமான உறவு நீடிக்கும்.
கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளனர். அங்கு அவர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்களா? என்பது கேள்விக்குறிதான். எனவே தமிழக அரசு இதுபோன்ற ஊராட்சிகளில் என்ன நெருக்கடிகள் உள்ளன என்பதை ஆய்வு செய்யவேண்டும். இதற்காக தனியாக ஒரு ஆணையம் அமைக்கவேண்டும்.
தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்களா? அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துகிறார்களா? ஏதாவது சாதிய நெருக்கடி உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமா வளவன் எம்.பி. கூறினார்.
Related Tags :
Next Story