மக்களுக்கு தவறான தகவல் சொல்வதை நிறுத்த வேண்டும்: நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
முதல்-அமைச்சர் நாராயணசாமி தவறான தகவல்களை சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
பொதுமக்களுக்கு இலவச துணி, அரிசி வழங்குவதை கவர்னர் கிரண்பெடி தடுப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பயனாளிகளுக்கு நேரடியாக நிதி பரிமாற்றம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை இந்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு போன்றவை உறுதி செய்துள்ளன. நேரடி பயனாளிகள் பரிமாற்றத்தின் (நிதி) முறை இலவச அரிசி, உதவித்தொகை அல்லது வேறு ஏதேனும் நன்மைகள், சிறப்பு பரிசுகள் போன்றவையாக இருக்கலாம்.
இந்த கொள்கை நடவடிக்கைக்குப் பின்னர் புதுச்சேரியில் பல கோடி ரூபாய் நேரடியாக லட்சக்கணக்கான ஏழை மக்கள் மற்றும் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. எந்தவொரு பயனாளிகளிடம் இருந்தும் இந்த நடவடிக்கை குறித்து ஒரு புகார்கூட வரவில்லை. தலைமை செயலாளர் மற்றும் நிதித்துறையினரால் முறையாக ஆராயப்பட்ட செயலகத்தால் அனுப்பப்படும் போதெல்லாம் கவர்னரின் செயலகம் அனைத்து நியாயமான தேவைகளையும் ஆதரித்துள்ளது.
எனவே குறை எங்குள்ளது? வேதனை அடைந்தவர் யார்? எப்போது நிர்வாகம் ஒரு சுத்தமான மற்றும் நேர்மையான சேவையை செய்யும்? முதல்-அமைச்சர் தனது மக்களுக்கு இந்த நன்மை குறித்து திருப்தியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதற்கு பதிலாக அவருக்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக புலம்புகிறார்.
எந்தவொரு நிதியிழப்பும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் அனைத்தையும் பெறுகிறார்கள் என்பதில் அவர் மிகவும் நிம்மதியும் நன்றியுணர்வும் கொண்டிருக்கவேண்டும். நேரடி பணபரிமாற்றம் இப்போது அங்கீகரிக்கப்பட்ட மற்றும் முறையான பயன் முறையாகும். இதற்குள் தவறான முடிவுகள் வர வாய்ப்பு இல்லை. இதில் வருவாய் இழப்பு இல்லை. பணம் நேரடியாக ஏழைகளின வங்கிக் கணக்கிற்கு செல்கிறது.
நடுத்தர தரவு இல்லை. கமிஷன் முகவர்கள் இல்லை. காத்திருக்க தேவையில்லை. எந்த கெடுதலும் இல்லை. எந்த ஊழலும் சம்பந்தப்படவில்லை. யாருடைய பரிந்துரையின்பேரிலும் கொடுக்கவும், எடுக்கவும் முடியாது. எந்த உதவியும் எடுக்கப்படவில்லை அல்லது கொடுக்கப்படவில்லை. சென்னை ஐகோர்ட்டு இந்த முறையைப்பற்றி விளக்கம் கேட்டபோது இந்திய அரசும், கவர்னரின் அலுவலகமும் இந்த கொள்கைகளை ஆதரித்தன. மேலும் அனைத்து செயலாளர்களும் இதை பின்பற்றுகிறார்கள். அதிகாரிகள் அவ்வாறு செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்திய அரசுக்கு எதிராகவும், கவர்னர் அலுவலகத்துக்கு எதிராகவும் மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதை முதல்-அமைச்சர் நிறுத்த வேண்டும். நீதிமன்றங்கள்கூட நேரடி பணபரிமாற்ற முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளன என்ற உண்மையை அவர் மக்களுக்கு சொல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story