வீடுகளுக்கு செய்தித்தாள்களை வினியோகிப்பதை தடுப்பது சரியல்ல - மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கருத்து


வீடுகளுக்கு செய்தித்தாள்களை வினியோகிப்பதை தடுப்பது சரியல்ல - மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கருத்து
x
தினத்தந்தி 11 Oct 2020 5:45 AM IST (Updated: 11 Oct 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

வீடு தோறும் சென்று நாளிதழ்கள், செய்தித்தாள்களை வினியோகிப்பதை யாரும் தடை செய்யக்கூடாது என்றும், அதை தடுப்பது சரியல்ல என்றும் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

மும்பை, 

மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

வீடு வீடாகச் சென்று நாளிதழ்களை மக்களுக்கு வினியோகம் செய்யப்படுவதை, எந்தவொரு குடியிருப்பு நல சங்கமோ அல்லது நிறுவனமோ, நிறுத்துவது சரியல்ல.

நான் தினமும் 20 செய்தித்தாள்களை வாசிக்கிறேன். அதனால் எந்தவொரு பிரச்சினையையும் நான் சந்திக்கவேயில்லை. எனவே எந்த குடியிருப்பு நலச் சங்கமாவது அல்லது வேறு யாராவது, வீடுகளுக்கு பேப்பர் போடுவதை தடுப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது.

எந்த பத்திரிகையை வாசிக்க வேண்டும் அல்லது வாசிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் மக்களே முடிவு செய்வதற்கு அவர்கள் விட்டுவிட வேண்டும். இந்த விஷயத்தில் அவர்களுக்கான வாய்ப்பை அவர்களே தேர்வு செய்வதற்கு விட்டுவிடுவதுதான் நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

குடியிருப்பு நல சங்கங்களின் தலைமை அமைப்பின் தலைமை நிர்வாகிகள்கூட, வீடு வீடாகச் சென்று மக்களுக்கு செய்தித்தாள் வினியோகம் செய்வதை தடுப்பது சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக மராட்டிய சமுதாய நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில குடியிருப்பு நல சங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

அதில், வீடுகளுக்குச் சென்று செய்தித்தாள்களை வினியோகிப்பது அத்தியாவசிய சேவையாகும் என்றும், அதை யாரும் நிறுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், வீடுகளுக்குச் சென்று அளிக்கும் சேவைகளில் தலையிடக்கூடாது என்றும், அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக செயல்படக்கூடாது என்றும் குடியிருப்பு நலச் சங்கங்களின் நிர்வாகிகளை, குடியிருப்பு நல சங்கங்களின் தலைமை அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

மக்களுக்கு சென்று சேர வேண்டிய அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதால், வீடு, வீடாக செய்யப்படும் செய்தித்தாள்கள் வினியோகத்தை தடுப்பது சட்ட விரோதமாகும் என்று மராட்டிய சமுதாய நலச் சங்கத்தின் தலைவர் ரமேஷ் பிரபு மற்றும் மராட்டிய வீட்டுவசதி கூட்டமைப்பின் தலைவர் பிரகாஷ் தரேகர் கூறியுள்ளனர்.

இதுபற்றி கேட்டபோது வக்கீல்கள் சிலர் கூறியதாவது:-

செய்தித்தாள்கள் வினியோகம் என்பது தகவல் அளிக்கும் செயல்பாட்டில் இருந்து பிரிக்க முடியாத மற்றும் முக்கியமான பங்காக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 19(1)(ஏ) மற்றும் 19(1)(கி) ஆகிய பிரிவுகள், தகவல் உரிமை, பேச்சுரிமை மற்றும் அதுதொடர்பான தொழில்களுக்கான உரிமைகளை பாதுகாக்கின்றன.

செய்தித்தாள்கள் வினியோகம்தான், தகவல் மற்றும் யோசனைகளை தெரிவிப்பதற்கான ஒரே முறையாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story