ஒருவழிப்பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு: வியாபாரிகள் போராட்டம் நடத்த முயற்சி - விழுப்புரத்தில் பரபரப்பு


ஒருவழிப்பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு: வியாபாரிகள் போராட்டம் நடத்த முயற்சி - விழுப்புரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Oct 2020 4:00 AM IST (Updated: 11 Oct 2020 8:34 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஒருவழிப்பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம் நடத்த முயன்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் ஒரு வழிப்பாதை திட்டத்தை காவல்துறையினர் அமல்படுத்தி உள்ளனர். இதில் விழுப்புரம் எம்.ஜி.சாலை, காமராஜர் தெரு, திரு.வி.க. சாலை ஆகியவை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன. இந்த சாலையில் இருந்து நேருஜி சாலைக்கு செல்ல வேண்டுமானால் காமராஜர் தெரு வழியாக பெரியார் சிலை, திரு.வி.க. சாலை, காந்தி சிலை வழியாக நேருஜி சாலையை அடைய வேண்டும் என்று ஒருவழிப்பாதையை போலீசார் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்த நடைமுறையை பின்பற்றி எம்.ஜி.சாலை வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு சரக்குகளை ஏற்றி, இறக்கி வருகின்றனர். ஆனால் கடைகளுக்கு பொருட்களை வாங்க இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்களும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதே சமயத்தில் எம்.ஜி.சாலை வியாபாரிகளின் வியாபாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஒருவழிப்பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மதியம் வியாபாரிகள் போராட்டம் நடத்த அங்குள்ள சாலையில் திரண்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று வியாபாரிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வியாபாரிகள் தரப்பில் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், விழுப்புரம் வணிகர் சங்க கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் கலைமணி, துணைத்தலைவர் முபாரக்அலி, பொதுச்செயலாளர் பிரேமானந்த் ஆகியோர் கூறுகையில், விழுப்புரம் நேருஜி சாலையில் வீரவாழி மாரியம்மன் கோவில் அருகில் சிக்னல் அமைக்க வேண்டும் என்றும் அதற்கான செலவை வியாபாரிகளாகிய நாங்களே ஏற்றுக்கொள்வதாகவும் கூறினர். மேலும் கே.கே.சாலை முனையில் உள்ள மின்மாற்றியை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்றும், எம்.ஜி.சாலையில் நாங்கள் வாகனங்களில் சரக்கு ஏற்றி, இறக்கிச்செல்ல ஒருவழிப்பாதையை கடைபிடிக்கிறோம், இருசக்கர வாகனங்களில் வருபவர் களுக்கு இருபுறமும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

இதை கேட்டறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story