கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 2-வது கட்டமாக தனியார் பள்ளிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 2-வது கட்டமாக தனியார் பள்ளிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 Oct 2020 2:30 AM IST (Updated: 12 Oct 2020 2:30 AM IST)
t-max-icont-min-icon

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 2-வது கட்டமாக தனியார் பள்ளிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, 

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 25- ந் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் முதற்கட்ட சேர்க்கை நடத்தப்பட்டது. அதில் இதுவரை நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களுக்கு 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்காக இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான கோவை மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற, தனியார் சுயநிதி பள்ளிகளில், எது நுழைவு நிலையோ (எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்பு) அந்த வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், பிறப்பு சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்திற்கும் கீழ் உள்ளோர்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல், சாதி சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story