குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் மதுபோதையில் போலீசாரிடம் தகராறு செய்தவர் மீது வழக்கு
குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் மதுபோதையில் போலீசாரிடம் தகராறு செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் மதுபோதையில் போலீசாரிடம் தகராறு செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் குஞ்சப்பனை மற்றும் பர்லியார் சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை செய்யப்படுகிறது. இதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உரிய இ-பாஸ் பெற்று வருகிறார்களா? எனவும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் உரிய சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்காக மாவட்ட நிர்வாகத்தால் சோதனைச்சாவடிகளில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஒரு கார் வந்தது. இந்த காரை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார்.
விசாரணையில் காரை ஓட்டி வந்தது கோத்தகிரி அருகே உள்ள கெர்பெட்டா அம்மன்நகரை சேர்ந்த ஒப்பந்ததாரர் மணிகண்டன் (வயது 45) என்பதும், காரில் அவருடைய நண்பர் ஒருவர் இருந்ததும் தெரியவந்தது. மேலும் 2 பேரும் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து மணிகண்டன் தொடர்ந்து காரை இயக்க வேண்டாம் என்று போலீசார் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், மற்றும் அவருடைய நண்பர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தகாத வார்த்தைகளால் போலீசாரை திட்டி, மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை அந்த காரில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் குஞ்சபனை சோதனைச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story