415 கிலோ கஞ்சா பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது தமிழகத்தில் பதுங்கி இருந்தபோது சிக்கினர்


415 கிலோ கஞ்சா பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது தமிழகத்தில் பதுங்கி இருந்தபோது சிக்கினர்
x
தினத்தந்தி 12 Oct 2020 3:15 AM IST (Updated: 12 Oct 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

415 கிலோ கஞ்சா பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் தமிழகத்தில் பதுங்கி இருந்தனர். அவர்களை கோலார் தங்கவயல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் கிருஷ்ணகிரி லைனில் கடந்த மாதம்(செப்டம்பர்) 9-ந் தேதி 189 கிலோ கஞ்சாவும், 30-ந் தேதி 226 கிலோ கஞ்சாவும் என மொத்தம் 415 கிலோ கஞ்சா கோலார் தங்கவயல் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜேம்ஸ் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகளான பல் ராஜா, வசந்த் ஆகியோரை வலைவீசி போலீசார் தேடி வந்தனர்.

மேலும் அவர்களின் செல்போன் எண்களை கைப்பற்றி சைபர் கிரைம் போலீசார் மூலம் அவர்களது நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது பல் ராஜா மற்றும் வசந்த் ஆகியோர் தங்களது மனைவிகளுடன் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இதையடுத்து போலீசார் நாகப்பட்டினத்திற்கு சென்று பல் ராஜா மற்றும் வசந்தை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் தங்களது மனைவிகளுடன் தப்பி ஓடினர். இதையடுத்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோலார் தங்கவயலுக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story