திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை: ஒருவர் கைது; 77 இருசக்கர வாகனங்கள் மீட்பு


திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை: ஒருவர் கைது; 77 இருசக்கர வாகனங்கள் மீட்பு
x
தினத்தந்தி 12 Oct 2020 3:58 AM IST (Updated: 12 Oct 2020 3:58 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 77 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மலைக்கோட்டை, 

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 51). இவரை கோட்டை குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 77 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் அனைத்தும் புகார் கொடுத்தவர்கள் அடிப்படையில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோட்டை போலீ நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மீட்கப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் வழங்கினார். மேலும் குற்றவாளியை பிடித்து வாகனங்களை மீட்ட தனிப்படை போலீசாரையும் அவர் பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் திருட்டு தொடர்ந்து நடைபெறுகிறது. தற்போது மீட்கப்பட்ட வாகனங்கள் திருச்சி மாநகர் மட்டுமல்லாமல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது.

இருசக்கர வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படுவதன் மூலம் இது போன்ற வாகன திருட்டை தவிர்க்கலாம். திருச்சி மாநகரத்தில் ஆயிரத்து 30 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் பெருவாரியான குற்றங்கள் தடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் உடனடியாக கண்டறியப்படுகிறார்கள். மாநகரில் செயின் பறிப்பு சம்பவங்கள் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர பல்வேறு வகையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் பவன்குமார்ரெட்டி (சட்டம், ஒழுங்கு), வேதரத்தினம் (குற்றம் மற்றும் போக்குவரத்து துறை) கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் ரவிஅபிராம் மற்றும் தனிப்படை போலீசார் உடனிருந்தனர்.


Next Story