ஒரு செல்போனுக்கு 2 பேர் போட்டியால் தகராறு: ஆன்லைனில் படிக்க முடியாததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை


ஒரு செல்போனுக்கு 2 பேர் போட்டியால் தகராறு: ஆன்லைனில் படிக்க முடியாததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 12 Oct 2020 4:24 AM IST (Updated: 12 Oct 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

ஒரு செல்போனுக்கு 2 பேரிடையே போட்டி ஏற்பட்டதால் தகராறு நடந்தது. ஆன்லைனில் படிக்க செல்போன் இல்லாதால் மனமுடைந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய மூலப்பொருளான ஸ்மார்ட் போன் தேவை. ஆனால் பெரும்பாலானவர்களிடம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஸ்மார்ட் போன் இல்லை.

சில வீடுகளில் ஒரு செல்போனை வைத்து, 2 அல்லது 3 மாணவ-மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள். இதனால் அந்த ஒரு செல்போனுக்கு கடும் போட்டி நிலவும். அவ்வாறு ஆன்லைன் மூலம் படிப்பதற்காக செல்போன் இல்லாததால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-

செல்போனுக்கு போட்டி

புதுவை அருகே உள்ள ரெட்டிச்சாவடி அடுத்த காரணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). இவருடைய மகள் ஸ்ரீநிதி (வயது 16), மகன் தனுஷ் (11). இதில் ஸ்ரீநிதி கீழ்குமாரமங்கலம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தனுஷ் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், ஸ்ரீநிதியும், தனுசும் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் படித்து வந்தனர். வீட்டில் உள்ள ஒரே ஒரு செல்போனில் 2 பேரும் படித்து வந்தனர். இதனால் தினமும் முதலில் அந்த செல்போனை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக அக்காள், தம்பிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

மாணவி தற்கொலை

கடந்த 7-ந் தேதி இருவருக்கும் இடையே செல்போனில் பாடம் படிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதைபார்த்த அவரது பெற்றோர் ஸ்ரீநிதியை கண்டித்தனர். ஆன்லைனில் பாடம் படிக்க செல்போன் இல்லையே என்று மனமுடைந்த ஸ்ரீநிதி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ஸ்ரீநிதி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story