மாநில எல்லையில் பஸ்கள் நிறுத்தம்: மூட்டை முடிச்சுகளுடன் பொதுமக்கள் அவதி


மாநில எல்லையில் பஸ்கள் நிறுத்தம்: மூட்டை முடிச்சுகளுடன் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 11 Oct 2020 10:59 PM GMT (Updated: 11 Oct 2020 10:59 PM GMT)

புதுவை மாநில எல்லையில் தமிழக பஸ்கள் நிறுத்தப்படுவதால் மூட்டை முடிச்சுகளை சுமந்து வரும் பயணிகளிடம் ஆட்டோ கட்டணம் அதிகமாக வசூலிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

புதுச்சேரி,

கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன் பல்வேறு நிபந்தனைகளுடன் புதுவையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதாவது புதுவை நகர பகுதிகளில் 7 அரசு பஸ்களும், காரைக்காலுக்கு 2 அரசு பஸ்களும் மட்டும் இயக்கப்பட்டன. புதுச்சேரி பகுதிக்குள் மட்டும் பஸ்கள் இயக்க அனுமதி அளித்ததால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்க முன்வரவில்லை.

இதற்கிடையே தமிழகத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து தொடங்கியது. புதுவை வழியாக சிதம்பரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்களுக்கு புதுவையின் உள்ளே பணிகளை ஏற்றி, இறக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் இருந்து புதுவைக்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் புதுவை மாநில எல்லையான கோரிமேடு, கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு, கன்னியகோவில் வரை வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.

அதிக கட்டணம் வசூல்

சென்னையில் இருந்து ஒருவர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுவைக்கு வந்தால் கனகசெட்டிகுளம் எல்லையிலும், புறவழிச்சாலை வழியாக வந்தால் கோரிமேடு எல்லையிலும் இறக்கி விடப்படுகிறார். அதன் பின்னர் புதுவைக்குள் வர இங்கு போதுமான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. மாநில எல்லையில் இருந்து புதுவை பஸ்நிலையத்திற்கு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

இதில் கோரிமேடு எல்லையில் இருந்து புதுவை வர பயணி ஒருவருக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை வசூலிக்கப்படுகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் ஒவ்வொரு எல்லையில் இருந்தும் தொலைவுக்கு ஏற்றார் போல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது கொரோனா காலத்தில் போதுமான வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வரும் பொதுமக்கள் இந்த கட்டண வசூலால் கடும் அவதி அடைந்துள்ளனர்.

கூடுதல் பஸ்கள்

தற்போது புதுவையில் 7 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் சில பஸ்கள் மட்டுமே மாநில எல்லை வரை செல்கிறது. மற்ற பஸ்கள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே புதுவை பஸ்நிலையத்தில் இருந்து மாநில எல்லைகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story