10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிக்க மறுப்பு: தஞ்சை பெரியகோவிலில் ஊழியர்களுடன் பக்தர்கள் வாக்குவாதம்


10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிக்க மறுப்பு: தஞ்சை பெரியகோவிலில் ஊழியர்களுடன் பக்தர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 12 Oct 2020 12:20 AM GMT (Updated: 12 Oct 2020 12:20 AM GMT)

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிக்க மறுப்பதாக கூறி தஞ்சை பெரியகோவிலில் ஊழியர்களுடன் பக்தர்கள் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தஞ்சை பெரியகோவில் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி மூடப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 4 வேளை பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அறிவிப்பு பலகை

மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகையும் கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை அதிக அளவில் உள்ளது. அதன்படி நேற்றும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அனுமதிக்க மறுப்பு

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய குழந்தைகளையும் அழைத்து வருகிறார்கள். ஆனால் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதி கிடையாது என கோவில் ஊழியர்கள் தெரிவித்தாலும் சிலர் கேட்பதில்லை. அவர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அதன்படி நேற்று வேலூர் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்களுடன் குழந்தைகளை அனுமதிக்க மறுத்ததால் கோவில் ஊழியர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் திடீரென பெரியகோவில் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து கோவிலுக்குள் சென்ற அவர்கள், ராஜராஜன் நுழைவுவாயில் அருகே சென்று மீண்டும் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கோரினர். அப்போது கோவில் கதவு சாத்தப்பட்டது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது என கோவில் ஊழியர்கள் கூறினர். இதனால் மீண்டும் வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் திரும்பிச்சென்றனர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Next Story