முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு நாளை வருகை ஆய்வு கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு நாளை வருகை ஆய்வு கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 12 Oct 2020 11:04 AM IST (Updated: 12 Oct 2020 11:04 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை குமரி மாவட்டத்துக்கு வருகிறார். இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில்,

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டத்துக்கு வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் அவர், அங்கிருந்து மாலை 6 மணிக்கு கார் மூலம் நாகர்கோவிலுக்கு வருகிறார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் (புதன்கிழமை) காலையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்களில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். இதனை தொடர்ந்து அலுவலக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். மேலும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, அரசு அதிகாரிகள், போலீஸ் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அனைத்து சிறு, குறு வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இதையொட்டி விழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அலுவலக வளாகத்தில் தற்காலிக மேடையுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடங்களில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் தினமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல்-அமைச்சர் வரும் வழித்தடங்களில் கட்சி கொடிகள் மற்றும் பேனர்கள், தோரணங்கள் வைக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாகர்கோவில் நகரம் முழுவதும் நேற்று முதல் விழாக்கோலம் பூண்டு காட்சி அளிக்கிறது.

Next Story