நிலப்பிரச்சினையில் தீர்வு கிடைக்காததால் போலீஸ் நிலையம் முன்பு ரோட்டில் படுத்து போராடிய விவசாயி


நிலப்பிரச்சினையில் தீர்வு கிடைக்காததால் போலீஸ் நிலையம் முன்பு ரோட்டில் படுத்து போராடிய விவசாயி
x
தினத்தந்தி 12 Oct 2020 11:29 AM IST (Updated: 12 Oct 2020 11:29 AM IST)
t-max-icont-min-icon

நிலப்பிரச்சினையில் தீர்வு கிடைக்காததால் தூசி போலீஸ் நிலையம் முன்பு விவசாயி ஒருவர் ரோட்டில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தூசி,

வெம்பாக்கம் தாலுகா பல்லாவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 48), விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன், சுப்பிரமணி, ராணி ஆகியோருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இதுகுறித்து ஏழுமலை தூசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசி, நிலப்பிரச்சினை என்பதால் நீங்கள் கோர்ட்டு மூலம் தீர்வு காணுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பச்சையப்பன், சுப்பிரமணி, ராணி ஆகிய மூவரும் பிரச்சினைக்குரிய அந்த இடத்தில் மீண்டும் மாட்டு கொட்டகை அமைத்து, வைக்கோல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏழுமலை மீண்டும் தூசி போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார், பச்சையப்பன் உள்பட 3 பேரையும் அழைத்து சரியாக விசாரணை செய்யவில்லை என்று ஏழுமலை கருதினார்.

இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று பகல் 12 மணி அளவில் தூசி போலீஸ் நிலையம் பகுதிக்கு வந்தார். திடீரென்று போலீஸ் நிலையம் முன்பு மெயின் ரோட்டில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து ஏழுமலையுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நிலப்பிரச்சினை என்பதால் வருவாய்த்துறை மூலம் தீர்வு காணும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

போலீஸ் நிலையம் முன்பு விவசாயி ரோட்டில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story