சேலம் லீ பஜார் பகுதியில் சாக்கடை கால்வாயில் கொரோனா கவச உடை வீசியது யார்? அதிகாரிகள் விசாரணை


சேலம் லீ பஜார் பகுதியில் சாக்கடை கால்வாயில் கொரோனா கவச உடை வீசியது யார்? அதிகாரிகள் விசாரணை
x

சேலம் லீ பஜார் பகுதியில் சாக்கடை கால்வாயில் கொரோனா கவச உடை வீசப்பட்டு கிடந்தது. அதனை வீசியது யார்? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்,

சேலம் மாநகரில் தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தினமும் 250 முதல் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மாநகராட்சி ஊழியர்களுக்கும், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பு முழு கவச உடை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சேலம் அரிசிபாளையத்தில் இருந்து லீ பஜார் செல்லும் வழியில் உள்ள சாக்கடை கால்வாயில் நேற்று காலை, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு முழு கவச உடை வீசப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சேலம் மாநகரில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சாக்கடை கால்வாயில் கொரோனா முழு கவச உடையை வீசி சென்றது யார்? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாநகரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஒரு முறை பயன்படுத்திய முக கவசங்களை குப்பைத்தொட்டி மற்றும் திறந்த வெளியில் வீச கூடாது எனவும், அதுபோன்று வீசும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் எச்சரிக்கை செய்துள்ளார்.

ஆனால் சேலத்தில் சாக்கடை கால்வாயில் கொரோனா கவச உடை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, கொரோனா தடுப்பு முழு கவச உடையை சாக்கடை கால்வாயில் வீசி சென்றவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றனர்.

Next Story