பெரியபாளையம் அருகே பயங்கரம்: கழுத்தை நெரித்து பெண் கொலை - போலீசார் விசாரணை


பெரியபாளையம் அருகே பயங்கரம்: கழுத்தை நெரித்து பெண் கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Oct 2020 12:38 AM IST (Updated: 13 Oct 2020 12:38 AM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையம் அருகே கழுத்தை நெரித்து பெண் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரியபாளையம், 

பெரியபாளையம் அருகே பன்றி மேய்க்க சென்ற பெண் கொட்டகை ஒன்றில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை யாரேனும் கற்பழித்து கொலை செய்தார்களா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அக்கரப்பாக்கம் ஊராட்சி, கலைஞர் நகர், சவுடு தெருவில் வசித்து வந்தவர் கவுரி (வயது 42). திருமணமான இவருக்கு எல்லையன் என்ற கணவர் உள்ளார். தம்பதியினருக்கு சித்ரா என்ற திருமணமான மகள் உள்ளார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வேலூர் மாவட்டம், வாலாஜாவில் வசித்து வரும் மகள் சித்ரா வீட்டிற்கு வந்திருந்த நிலையில், பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட சண்டையை அவர் சமாதானம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பன்றிகளை மேய்த்துக்கொண்டு கன்னிகைபேர் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறமுள்ள கொட்டகைக்கு கவுரி சென்றுள்ளார். வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் சந்தேகம் அடைந்து பன்றிகள் அடைக்கப்படும் கொட்டகைக்கு அவரை தேடி நேற்று காலை சென்றனர்.

அப்போது அங்கே உள்ள முட்புதரில் கழுத்து நெரிக்கப்பட்டு, உடைகள் இன்றி நிர்வாணமான நிலையில் கவுரி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் அணிந்திருந்த 4 பவுன் நகைகள் திருட்டு போனதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கவுரியின் உடலை மீட்டு, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகைக்காக கொலை நடந்ததா? அல்லது அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற செங்கை சரக டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி ஆகியோர் பார்வையிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்தான் உண்மையான நிலை தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story