சென்னை, புறநகரில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னை, புறநகரில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சென்னை,
சென்னையில் நேற்று மதியம் சூரியனின் தாக்கம் மிகுதியாகவே குறைந்திருந்தது. பிற்பகல் முதலே இதமான சூழல் நிலவியது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலையே காணப்பட்டது. இதனால் இன்றைக்கு மழை வெளுத்து வாங்க போகிறது என்றே சென்னைவாசிகள் எண்ணியிருந்தனர்.
அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதை போலவே சென்னையில் நேற்று அனேக இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. மாலை 5 மணிக்கு பல இடங்களில் சுமார் 20 நிமிடங்கள் பரவலான மழை பெய்து ஓய்ந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் மீண்டும் மழை பெய்தது. இடி-மின்னலுடன் மழை பெய்தது.
அந்தவகையில் சென்னை எழும்பூர், வேப்பேரி, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மெரினா காமராஜர் சாலை, சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாநகர், திருமங்கலம், சென்டிரல், சாந்தோம், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. அதேபோல தாம்பரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை, மீனம்பாக்கம், செங்குன்றம், சோழவரம், விளாங்காடுபாக்கம், மாதவரம், கொடுங்கையூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
நேற்று மாலை 6 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை மாலை 6.45 மணிக்கு ஓய்ந்தது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளிலும் ஆங்காங்கே மழைநீர் குளம் போல தேங்கி இருந்தது. இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்வதில் சற்று சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வாட்டி வதைத்த வெயிலுக்கு மத்தியில் பெய்த திடீர் மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story