வேளாண் சட்டங்களை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
மலைக்கோட்டை,
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும், திருச்சியில் தரைக்கடை வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அனைத்து வியாபாரிகளுக்கும் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்குப் பகுதி செயலாளர் அன்சார்தீன் தலைமையில் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கோட்டை போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 109 பேரை கைது செய்து வேனில் ஏற்றி மதுரை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
திருவெறும்பூர் கடைவீதியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலர் இளையராணி, கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தொட்டியம் ஸ்டேட் வங்கி முன்பு கட்சியின் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். உப்பிலியபுரம் அண்ணாசிலை அருகே ஒன்றிய செயலாளர் மருதை தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
முசிறி கைகாட்டியில், ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 14 பேரும், தா.பேட்டை கடைவீதியில் ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 18 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story