வடகர்நாடகத்தில் தொடர் கனமழை வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு பெண் உள்பட 2 பேர் பலி


வடகர்நாடகத்தில் தொடர் கனமழை வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 Oct 2020 3:36 AM IST (Updated: 13 Oct 2020 3:36 AM IST)
t-max-icont-min-icon

வடகர்நாடகத்தில் தொடர் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. உக்கேரியில் மழை வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கனமழைக்கு பெண் உள்பட மேலும் 2 பேர் இறந்தனர்.

பெங்களூரு,

வங்ககடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட தென்கர்நாடக பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும், வடகர்நாடக மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

வடகர்நாடகத்தில் பெய்து வரும் கனமழைக்கு நேற்று முன்தினம் தாய்-மகள் உள்பட 6 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்றும் பெலகாவி, கலபுரகி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பெலகாவி மாவட்டம் உக்கேரி டவுன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இரவு முழுவதும் விடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் உக்கேரி டவுனில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டிற்குள் இருந்த அஸ்லம்கான்(வயது 53) என்பவர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்த உக்கேரி போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று அஸ்லம்கானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெண் சாவு

இதுபோல கலபுரகி மாவட்டம் கமலாப்புரா அருகே வசித்து வந்தவர் சந்தாபாய்(40). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றில் குளித்து கொண்டு இருந்த சந்தாபாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுபற்றி அறிந்த கமலாப்புரா போலீசார், தீயணைப்பு படையினர் சந்தாபாயின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அடித்து செல்லப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் சந்தாபாயின் உடல் மரத்தில் சிக்கி இருந்தது.

இதுபற்றி அறிந்த போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று சந்தாபாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்றும் மழை, வெள்ளத்திற்கு 2 பேர் இறந்ததால் வடகர்நாடகத்தில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

நிவாரணம் கோரி போராட்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது மஸ்கி ஆற்றில் சிக்கி கொண்ட சன்னபசவா(34) என்பவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அதே நேரத்தில் அந்த ஆற்றில் சிக்கிய ஜலீல் என்பவரை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அதிகாரிகள் மீட்டனர்.

இந்த நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் சன்னபசவா இறந்து விட்டதாகவும், எனவே அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும் நேற்று காலை சன்னபசவாவின் மனைவி, குடும்பத்தினர் மஸ்கியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதுபற்றி அறிந்த மஸ்கி போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

அணைகளில் தண்ணீர் திறப்பு

இந்த நிலையில் விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்தியில் உள்ள அலமட்டி, யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா நாராயணபுராவில் உள்ள பசவசாகர் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

கடல்மட்டத்தில் இருந்து 519.60 மீட்டர் உயரம் கொண்ட அலமட்டி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை தனது கொள்ளளவை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 655 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரத்து 124 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதுபோல கடல்மட்டத்தில் இருந்து 492.25 மீட்டர் உயரம் கொண்ட பசவசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 492.09 மீட்டராக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரத்து 247 கனஅடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு 56 ஆயிரத்து 865 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றங்கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்

குறிப்பாக கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் உள்ள பெலகாவி மாவட்டம் உக்கேரி டவுனை வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. மேலும் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளும் இடிந்து விழுந்தன. குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளத்தில் சிலர் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதற்கிடையே மழை, வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்படும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

கோட்டை சுவர் இடிந்தது

உக்கேரியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக சுவர் இடிந்து உள்ளது. சவதத்தியில் உள்ள சுற்றுலா தலமான சவதத்தி கோட்டையின் சுவரும் இடிந்து விழுந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. உக்கேரியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை இரவு முழுவதும் மழை விடாமல் கொட்டி தீர்த்தது.

இதுபோல யாதகிரி மாவட்டம் சுராப்புராவில் விளைநிலங்களில் புகுந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை அடித்து சென்றது. இதனால் தங்களுக்கு அரசு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தொடர் கனமழையால் வடகர்நாடகத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் வடகர்நாடக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story