மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை கண்டித்து கோவை மாவட்டத்தில் 14 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்


மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை கண்டித்து கோவை மாவட்டத்தில் 14 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
x
தினத்தந்தி 13 Oct 2020 4:30 AM IST (Updated: 13 Oct 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை கண்டித்து கோவை மாவட்டத்தில் 14 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

கோவை, 

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களை கண்டித்தும், தொழிலாளர் சட்டங்களை கம்பெனி நிர்வாகத்திற்கு ஆதரவாக திருத்தி உள்ளதை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தமிழகம் முழுவதும் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கோவை மாவட்டத்தில் 14 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாநகர் மேற்கு மண்டல குழுவின் சார்பில் லாலி ரோடு சிக்னலில் உள்ள வேளாண்மை அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு மேற்கு மண்டல செயலாளர் ஜே.ஜேம்ஸ் தலைமை தாங்கினார். இதில் மண்டல துணை செயலாளர் என்.சந்திரன், பொருளாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் நிர்மலா, அஷ்ரப் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய போது திடீரென்று சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், அவசரமாக நிறைவேற்றப்பட்ட வேளாண்மை சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே உடனடியாக அந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், துணைச்செயலாளர் ஆர்.தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆர்.சுதர்சன், அமிர்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டலம் பி.ஆர்.புரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநில பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.ஆறுமுகம், மற்றும் யு.கே.சுப்பிரமணியம், மு.வ.கல்யாணசுந்தரமும், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் பகுதியில் கணபதியில் நடைபெற்ற மறியலில் மாவட்ட துணை செயலாளர் சி.சிவசாமி, பி.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சூலூர் கலங்கல் பிரிவு அருகே சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மவுனசாமி, வட்டார செயலாளர் வசந்தகுமார், மாணவர் பெருமன்ற மாநில தலைவர் குணசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், அன்னூர் உள்பட 14 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.


Next Story