கொட்டாம்பட்டி அருகே, வனத்துறையினர் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு


கொட்டாம்பட்டி அருகே, வனத்துறையினர் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 Oct 2020 3:15 PM IST (Updated: 13 Oct 2020 4:18 PM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே வனத்துறையினர் நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எதிர்ப்பை மீறி நிலத்தை கையகப்படுத்தினால் பதவியை ராஜினாமா செய்ய போவதாக ஊராட்சி மன்ற தலைவர் அறிவித்துள்ளார்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி, சிலம்பக்கோன்பட்டி, குமரப்பட்டி ஆகிய 3 கிராமங்கள் உள்ளது. இந்த 3 கிராமங்களிலும் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கிராமப்பகுதியில் 2500-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கூடங்கள், சமுதாய கூடங்கள் உள்பட அடிப்படை வசதிகளோடு வாழ்ந்து வரும் நிலையில், சமீபத்தில் இசரிவலந்தான், செங்காலன்மலை ஆகிய பகுதியிலுள்ள 420 எக்டர் பரப்பளவு பகுதிகளை கையகப்படுத்தும் பணிக்கு 3 கிராமங்களை சேர்ந்த மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஊராட்சி சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது 3 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை உடனே கைவிட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து 3 கிராமங்களை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கினால் பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலரான அவரது மனைவி வள்ளிமயில் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்வதோடு, வார்டு உறுப்பினர்களும் ராஜினாமா செய்வதாக தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் ஆயிரம் ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் நிலத்தை கையகப்படுத்தினால் விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்த்து வாழ்க்கை நடத்துவோர் மிகவும் சிரமப்படும் நிலை உருவாகும் என தெரிவித்தனர்.

Next Story