புதுவை, காரைக்காலில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை


புதுவை, காரைக்காலில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை
x
தினத்தந்தி 13 Oct 2020 10:50 PM GMT (Updated: 13 Oct 2020 10:50 PM GMT)

புதுவை, காரைக்காலில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

புதுச்சேரி,

சுனாமி பேரலை நாட்டையே புரட்டிப் போட்டதையடுத்து கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய அமைப்பு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதாவது, பேரிடர் காலத்தில் பொதுமக்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஒத்திகை நடத்தியும், சாகசம் செய்தும் காட்டுவார்கள்.

அதன்படி நேற்று புதுவையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது கொரோனா காலம் என்பதால் பொதுமக்களை அனுமதிக்காமல் தகவல் தொடர்பு சோதனைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தகவல்களை பெறும் கட்டுப்பாட்டு அறையாக கலெக்டர் அலுவலக கருத்தரங்க அறை பயன்படுத்தப்பட்டது.

துணை கலெக்டர் விளக்கம்

இங்கிருந்து சுனாமி உருவானது தொடர்பான தகவல்கள் வருவாய், காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அரசுத் துறைகள் எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பாக பழைய துறைமுக வளாகத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

துணை கலெக்டர் சக்திவேல் சுனாமி மீட்பு நடவடிக்கையில் அரசுத் துறைகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். சுனாமியால் பாதிக்கப்படுவோருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் மீட்பு பணியில் ஈடுபடுவோர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வருவாய், காவல், தீயணைப்பு, உள்ளாட்சி, சுகாதாரம், சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை நடத்தப்பட்டது. தற்போது கொரோனா காலம் என்பதால் கிராமங்கள் மற்றும் பொது இடங்களில் நடத்துவதை தவிர்த்து கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்றது. இதில் அதிகாரிகளின் வீரதீர செயல்கள் இடம்பெறவில்லை. பொதுமக்கள் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

ஒத்திகையில் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் நின்றனர். திடீரென்று பேரிடர் ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது? என்பதை விளக்கி 16 குழுக்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தீயணைப்பு வாகனத்தை சூழ்ந்து நின்றனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் ஆகியோர் அங்கு வந்து தீயணைப்பு வாகனத்தை ஆய்வு செய்தார்.

Next Story