ஓய்வு பெற்ற நர்சு வீட்டில் நகை, பணம் திருட்டு கைவரிசை காட்டிய பெண் கைது


ஓய்வு பெற்ற நர்சு வீட்டில் நகை, பணம் திருட்டு கைவரிசை காட்டிய பெண் கைது
x
தினத்தந்தி 13 Oct 2020 10:53 PM GMT (Updated: 13 Oct 2020 10:53 PM GMT)

காரைக்கால் அருகே ஓய்வு பெற்ற நர்சு வீட்டில் நகைகள், பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடி காலனி தெருவைச் சேர்ந்தவர் பவுனம்மாள் (வயது 68). அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது கணவர் கணேசன் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது 2 மகள்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் தற்போது வசித்து வருகின்றனர். இதனால் பவுனம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இவரது வீட்டுக்கு வரிச்சிகுடி சோனியாகாந்தி நகரை சேர்ந்த பிரபாகரன் மனைவி பாத்திமா (28) என்பவர் வந்து துணிகள் தைத்து தருவது வழக்கம். அதன்படி கடந்த 10-ந் தேதி பவுனம்மாள் வீட்டுக்கு சென்ற பாத்திமா துணிகளை கொடுத்துவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது பவுனம்மாள் குளிக்கச் செல்வதாக கூறியதால் பாத்திமா வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். குளிப்பதற்கு முன் தான் அணிந்து இருந்த 12½ பவுன் தங்க செயின், 3 மோதிரங்களை கழற்றி மேஜையில் வைத்துவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் வந்து பார்த்த போது மேஜையில் வைத்திருந்த அந்த நகைகள், ரூ.4 ஆயிரம் ரொக்கம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பெண் கைது

இதையடுத்து வீட்டுக்கு வந்து சென்ற பாத்திமாவின் வீட்டுக்கு போலீசார் சென்ற போது அவர் தலைமறைவானது தெரியவந்தது. தொடர் விசாரணையில் திருவாரூரில் உள்ள உறவினர் வீட்டில் பாத்திமா இருப்பதாக தகவலறிந்து போலீசார் அங்கு சென்று அவரை மடக்கிப்பிடித்து கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். இதில் பவுனம்மாள் வீட்டில் நகைகள், பணத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். திருடிய நகைகளை ரூ.1 லட்சத்துக்கு விற்று புதிதாக தங்க நகைகளை வாங்கியதாகவும், ரூ.30 ஆயிரம் செலவு செய்ததாகவும் பாத்திமா தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் பாத்திமாவை கைது செய்து ரூ.1லட்சத்து 14 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன் மற்றும் விற்பனை செய்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை உடனடியாக பிடித்த கோட்டுச்சேரி போலீசாரை மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் ஆகியோர் பாராட்டினர்.

Next Story