திருவள்ளூர் அருகே குழந்தைகள் மீது மாட்டு வண்டியை ஏற்ற முயன்றதை தட்டி கேட்டதால் மோதல் 6 பேர் கைது


திருவள்ளூர் அருகே குழந்தைகள் மீது மாட்டு வண்டியை ஏற்ற முயன்றதை தட்டி கேட்டதால் மோதல் 6 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2020 5:06 AM IST (Updated: 14 Oct 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே குழந்தைகள் மீது மாட்டு வண்டியை ஏற்ற முயன்றதை தட்டி கேட்டதால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த சேலை கண்டிகை கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி மரியா (வயது 30). நேற்று முன்தினம் மரியா, அவரது உறவினர்கள், குழந்தைகள் வீட்டின் வெளியில் அமர்ந்து இருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் வந்த அதே கிராமத்தை சேர்ந்த டென்னி (25) அங்கு அமர்ந்திருந்த குழந்தைகள் மீது ஏற்றுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டு பதறிப்போன மரியா அவரை இது குறித்து தட்டி கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த டென்னி தனது நண்பர்களான கார்த்திக் (27), அஜித் (25), பசுபதி (25), மாதவன் (32), பழனி (53) ஆகியோருடன் சேர்ந்து மரியாவை தகாத வார்த்தையால் பேசி அவரை அடித்து உதைத்தனர்.

இதை கண்டு தடுக்க வந்த மரியாவின் உறவினரான ரேணுகாவை கட்டையால் தாக்கினார். மேலும் மற்றொரு உறவினரான சுமன் என்பவரை மேற்கண்ட நபர்கள் கத்தியால் தலையில் வெட்டி விட்டு விஜய் என்பவரையும் கட்டையால் தாக்கி கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

6 பேர் கைது

இதில் காயம் அடைந்த மரியா, ரேணுகா, சுமன், விஜய், ஆகியோர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து மரியா திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டென்னி, கார்த்திக், அஜித், பசுபதி, மாதவன், பழனி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story