சென்னையில் பட்டப்பகலில் அலுவலகத்துக்குள் புகுந்து தி.மு.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு பெண் ஊழியர் மீதும் தாக்குதல்


சென்னையில் பட்டப்பகலில் அலுவலகத்துக்குள் புகுந்து தி.மு.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு பெண் ஊழியர் மீதும் தாக்குதல்
x
தினத்தந்தி 14 Oct 2020 5:08 AM IST (Updated: 14 Oct 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கே.கே.நகரில் தி.மு.க. பிரமுகர் தனசேகரனை அரிவாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் 2 பேர் தப்பி சென்று விட்டனர். அவரது அலுவலக பெண் ஊழியரை தாக்கியதை தடுத்தபோது தனசேகரன் வெட்டப்பட்டார்.

பூந்தமல்லி,

தென்சென்னை தி.மு.க.வில் முக்கிய பிரமுகராக செயல்படுபவர் தனசேகரன். 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர். கவுன்சிலராக பணியாற்றி உள்ளார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். அவர் சென்னை கே.கே.நகர் 12-வது செக்டாரில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரது வீட்டோடு அலுவலகம் உள்ளது.

அவரது அலுவலகத்தில் அமுதவல்லி (வயது 40) என்பவர் ஊழியராக வேலை செய்கிறார். அவரும், அவரது கணவர் பொன்வேலு என்பவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் அமுதவல்லி, அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரது கணவர் பொன்வேலு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து இறங்கினார். பொன்வேலுவுடன் மற்றொருவரும் வந்தார். இருவரும் சேர்ந்து அமுதவல்லியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். அவர் என்னை காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த தனசேகரன் ஓடிவந்தார். அமுதவல்லியை காப்பாற்ற முயன்றபோது தனசேகரனுக்கும் தலை, கைவிரல் மற்றும் தோள் பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இருப்பினும் தாக்குதல் நடத்திய இருவரையும் தனசேகரன் பிடிக்க முற்பட்டார்.

தப்பி ஓட்டம்

ஆனால் அதற்குள் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தனசேகரன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஊழியர் அமுதவல்லி கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனசேகரனின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகர பிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். கே.கே.நகர் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தப்பி ஓடிய பொன்வேலு உள்ளிட்ட இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கே.கே.நகர் பகுதியில் நேற்று மாலை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் 2 பேர் கைது

இதற்கிடையில், தப்பி ஓடிய பொன்வேலு அவருடைய நண்பர் மணிவண்ணன் ஆகிய இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களது கைவிரலில் அரிவாள் வெட்டு காயம் இருந்ததாகவும், அதனால் அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாகவும் போலீசார் கூறினார்கள்.

Next Story