கம்பத்தில், முகநூலில் அவதூறு பரப்பியதாக புகார்: இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் கைது போலீஸ் நிலையம்முற்றுகை-மறியல


கம்பத்தில், முகநூலில் அவதூறு பரப்பியதாக புகார்: இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் கைது போலீஸ் நிலையம்முற்றுகை-மறியல
x
தினத்தந்தி 14 Oct 2020 5:17 AM IST (Updated: 14 Oct 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் முகநூலில் அவதூறு பரப்பியதாக இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கம்பம்,

தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது சாதிக் (வயது 33). இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்திலும், பிற சமூக வலைத்தளங்களிலும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார்கள் வந்தன. அதன்பேரில் முகமது சாதிக் மீது பல்வேறு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.

இந்தநிலையில் அவதூறு வழக்கில் முகமது சாதிக்கை கம்பம் வடக்கு போலீசார் நேற்று கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் உதுமானையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்களது உறவினர்கள், முகமது சாதிக் மற்றும் உதுமானை விடுவிக்ககோரி கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உதுமானை விடுவித்து விடுவோம் என்று கூறினார். இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் உதுமானை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் முகமது சாதிக்கையும் உறவினர்களிடம் காட்ட வேண்டும் என்று கோரி போலீஸ் நிலையம் முன்பு கம்பம்-குமுளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் விடுவித்ததை அடுத்து மறியல் நடைபெற்ற இடத்திற்கு உதுமான் வந்தார். இதைத்தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கம்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட முகமது சாதிக், உத்தமபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் கம்பத்தில் ஏராளமான போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர்.

Next Story