ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
x
தினத்தந்தி 14 Oct 2020 5:43 AM IST (Updated: 14 Oct 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூல அலுவலகம் தனி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டிடத்தின் 3-வது தளத்தில் பொதுப்பணித்துறையின் முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. அங்கு உதவி இயக்குனராக மகேஷ் பாண்டி பணியாற்றி வருகிறார்.

இந்த அலுவலகத்தின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் நிறுவனங்களில் உள்ள கொதிகலன்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திடீர் சோதனை

இந்தநிலையில் நிறுவனங்களிடம் இருந்து முதுநிலை கொதிகலன்கள் அலுவலக அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார் நேற்று மாலை ஈரோடு முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த அலுவலகத்தில் உதவி இயக்குனர் மகேஷ் பாண்டி, அலுவலக உதவியாளர் ஒருவர், டிரைவர், வெளிநபர் என 4 பேர் இருந்தனர். அலுவலகத்தின் கதவை மூடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும், அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சுமார் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story