மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 50 சதவீத மானியம் கலெக்டர் மெகராஜ் தகவல்


மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 50 சதவீத மானியம் கலெக்டர் மெகராஜ் தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2020 10:35 AM IST (Updated: 14 Oct 2020 10:35 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியால் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக ‘ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டம்‘ அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இத்திட்டம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். மேலும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.

ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திற்கு கோழி உள்ளிட்டவற்றை பதப்படுத்துதல் சம்பந்தமான மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்பு உள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சாரதா, இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ராசு, மகளிர் திட்ட இயக்குனர் டாக்டர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story