போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்ம சாவு: மீண்டும் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்


போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்ம சாவு: மீண்டும் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 14 Oct 2020 3:00 PM IST (Updated: 14 Oct 2020 2:52 PM IST)
t-max-icont-min-icon

சேடபட்டி அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 சப்-இன்ஸ்பெக்டர்களும் மீண்டும் பணிக்கு திரும்பியதால் கிராம மக்கள் திரண்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உசிலம்பட்டி,

பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் ரமேஷ். கடந்த மாதம் 16-ந் தேதி சாப்டூர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரமேஷ் மறுநாள் காலையில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அந்த கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்கண்ணன் மற்றும் பரமசிவம் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்களும் மீண்டும் வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் பணிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் ரமேஷின் சாவுக்கு காரணமாக இருந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்களையும் மீண்டும் பணியில் சேர்த்துள்ளனர். போலீசார் வேண்டுமென்றே நாடகமாடி எங்களை ஏமாற்றி விட்டனர். எனவே அவர்கள் இருவரையும் பணியில் இருந்து நீக்கி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரமேஷின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அணைக்கரைப்பட்டியில் உள்ள நாடக மேடை முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இரவிலும் இந்த போராட்டம் நீடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story