பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் சாலையோர ஆக்கிரமிப்புக்கள் அகற்றம் - போலீசார் குவிப்பு


பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் சாலையோர ஆக்கிரமிப்புக்கள் அகற்றம் - போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2020 4:30 PM IST (Updated: 14 Oct 2020 4:54 PM IST)
t-max-icont-min-icon

பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

திருக்காட்டுப்பள்ளி,

பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை பகுதியில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள், நேற்று காலை நெடுஞ்சாலை துறை மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

அய்யனாபுரம் சாலையோரத்தில் ஆவின் பால் நிறுவனம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம், அதன் அருகில் அரைகுறையாக இருந்த நிழற்குடை, திருக்காட்டுப்பள்ளி சாலையில் கடைகளுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் பூண்டி வெங்கடேசன், தங்ககென்னடி ஆகியோர் ஆவின் பாலகத்தை தாங்களாகவே அகற்றி கொள்ள கால அவகாசம் கொடுக்குமாறு நெடுஞ்சாலை துறை, காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் குடியிருந்து வரும் வேல்முருகன் குடும்பத்தினர் காலி செய்ய கூடுதல் அவகாசம் கேட்டு தாசில்தாரிடம் ரேஷன் கார்டை கொடுத்து முறையிட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து எல்லா ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்தது.

திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வேல்முருகன், பூதலூர் தாசில்தார் சிவக்குமார், வட்ட சர்வேயர் சத்யபாமா, கிராம நிர்வாக அலுவலர்கள் முத்தமிழ்செல்வன், பெஞ்சமின், நெடுஞ்சாலை தூறை உதவி பொறியாளர் அன்சாரி, ராஜா ஆகியோர் இடத்தில் முகாமிட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணித்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் நின்றுவிடாமல் மீண்டும் அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யவிடாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரினர்.

Next Story