வேட்டவலம் அருகே, விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
வேட்டவலம் அருகே விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் ஸ்ரீதேவி விசாரணை நடத்தி வருகிறார்.
வேட்டவலம்,
வேட்டவலத்தை அடுத்த கலிங்கலேரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சரண்யாவுக்கும் (20) விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா ஈயக்குணம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி சரண்யாவும், அவரது கணவரும் கலிங்கலேரிக்கு வந்தனர். நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த சரண்யா விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து சரண்யா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின்பேரில் வேட்டவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிந்து சரண்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமான 2 மாதத்தில் சரண்யா தற்கொலை செய்து கொண்டதால் திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story