கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 17-ந் தேதி தொடங்குகிறது


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 17-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 14 Oct 2020 4:25 PM GMT (Updated: 14 Oct 2020 4:25 PM GMT)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாமல் இருந்தனர். ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் குறைந்த அளவிலான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இங்கு நவராத்திரி திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 17-ந் தேதி காலையில் அம்மன் கொலுமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கும், காலை 10 மணிக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பகல் 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும், இரவில் அம்மன் வாகனத்தில் பவனி வருதலும் நடக்கிறது.

10-ம் திருவிழா அன்று முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை நிகழ்ச்சி மகாதானபுரத்தில் நடப்பது வழக்கம். இதற்காக கோவிலில் இருந்து அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி யானை, குதிரைகள் முன்செல்ல 500 -க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக சென்று மகாதானபுரத்தில் பானாசுரன் என்ற அரக்கனை வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பரிவேட்டை நிகழ்ச்சி 10-ம் திருவிழாவான 26- ந்தேதி மாலை 6 மணிக்கு முதல் முறையாக மகாதானபுரத்துக்கு பதிலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஈசான மூலையில் நடக்கிறது.

இந்த பரிவேட்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நவராத்திரி திருவிழாவையொட்டி குமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சாமிசிலைகள் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுத்தது போல் மகாதானபுரத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி நடந்து வந்த பரிவேட்டை நிகழ்ச்சியை அதே இடத்தில் ஆகமவிதிப்படி நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு அரசு அனுமதி அளிக்காவிட்டால் போராட்டம் நடத்தவும் பக்தர்கள் முடிவு செய்து உள்ளனர்.

Next Story