மெட்ரோ ரெயில் பணிமனை அமைய உள்ள காஞ்சூர்மார்கில் மந்திரி ஆதித்ய தாக்கரே நேரில் ஆய்வு


மெட்ரோ ரெயில் பணிமனை அமைய உள்ள காஞ்சூர்மார்கில் மந்திரி ஆதித்ய தாக்கரே நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 14 Oct 2020 9:38 PM GMT (Updated: 14 Oct 2020 9:38 PM GMT)

மெட்ரோ ரெயில் பணிமனை அமைய உள்ள காஞ்சூர்மார்கில் மந்திரி ஆதித்ய தாக்கரே நேரில் ஆய்வு செய்தார். மண்பரிசோதனை தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.

மும்பை,

மும்பையில் கொலபா-பாந்திரா-சீப்ஸ் இடையே 3-வது மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்காக ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை அமைக்க திட்டமிடப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் கடும் எதிர்ப்பையும் மீறி அங்கு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வந்தது.

இந்தநிலையில் சிவசேனா தலைமையிலான அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரேகாலனியில் நடந்து வந்த மெட்ரோ பணிகளுக்கு தடைவிதித்தது. மேலும் ஆரேகாலனி பகுதியை வனப்பகுதியாக அறிவித்தது.

இந்தநிலையில் ஆரேகாலனியில் அமைய இருந்த மெட்ரோ ரெயில் பணிமனை காஞ்சூர்மார்கிற்கு மாற்றப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

நேரில் ஆய்வு

இந்தநிலையில் சுற்றுச்சூழல் துறை மந்திரியும், மும்பை புறநகர் பொறுப்பு மந்திரியுமான ஆதித்ய தாக்கரே நேற்று மெட்ரோ ரெயில் பணிமனை அமைய உள்ள காஞ்சூர்மார்க் பகுதியை பார்வையிட்டார்.

பின்னர் அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இன்று (நேற்று) காலை எம்.எம்.ஆர்.டி., எம்.எம்.ஆர்.சி.எல். அதிகாரிகளுடன் காஞ்சூர் மார்க் பகுதியை பார்வையிட்டேன். 3 மற்றும் 6-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தின் பணிமனை இங்கு அமைய உள்ளது. இதற்கான மண் பரிசோதனை தொடங்கி விட்டது. நகரின் பசுமை நுரையீரல் பகுதியாக விளங்கிய ஆரேகாலனியில் இருந்து மெட்ரோ ரெயில் பணிமனையை இங்கு மாற்றி அமைத்ததற்காக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரி பாலசாகேப் தோரட் ஆகியோருக்கு எனது இதயப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story