மும்பையில் 19-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம் கடைகளை இரவு 9 மணி வரை திறந்து வைக்க அரசு அனுமதி


மும்பையில் 19-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம் கடைகளை இரவு 9 மணி வரை திறந்து வைக்க அரசு அனுமதி
x
தினத்தந்தி 14 Oct 2020 9:44 PM GMT (Updated: 14 Oct 2020 9:44 PM GMT)

மும்பையில் மெட்ரோ ரெயிலை இயக்கவும், மாநிலத்தில் கடைகளை இரவு 9 மணி வரை திறந்து வைக்கவும் அரசு அனுமதி அளித்து உள்ளது. மேலும் விமான, ரெயில் பயணிகளுக்கு அழியாத மை குத்தப்படுவது நிறுத்தப்படும் எனவும் அரசு தெரிவித்து இருக்கிறது.

மும்பை,

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கும் மராட்டியத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தளர்வுகள்

இதற்காக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மேலும் தளர்வுகளை நேற்று மாநில அரசு வெளியிட்டது. அதன்படி மும்பையில் கடந்த சுமார் 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மெட்ரோ ரெயில் சேவையை இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து மும்பை மெட்ரோ ஒன் தனியார் நிறுவனம் (எம்.எம்.ஓ.பி.எல்) வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரசின் அனுமதியை அடுத்து மும்பையில் மெட்ரோ ரெயில்கள் வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா?

மேலும் மும்பை மெட்ரோ ஒன் தனியார் நிறுவனம் தனது டுவிட்டர் பதிவில், வெர்சோவா- அந்தேரி- காட்கோபர் இடையே வருகிற திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கையாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் மெட்ரோ ரெயில்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா? அல்லது மின்சார ரெயில்களை போல அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இயக்கப்படுமா? என்பது குறித்து தெளிவுப்படுத்தப்படவில்லை.

11.7 கிலோ மீட்டர் வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த மெட்ரோ ரெயில் சேவையை தினமும் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

கடைகளுக்கு கூடுதல் நேரம்

இதேபோல மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் சார்பில் நடத்தப்படும் நூலகங்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இன்று முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் வாரச்சந்தைகளை மீண்டும் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் கால்நடை சந்தைகளும் அடங்கும். தொழில்முறை சார்ந்த கண்காட்சிகளை நடத்தவும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இன்று முதல் மார்க்கெட், கடைகளை கூடுதலாக 2 மணி நேரம், அதாவது இரவு 9 மணி வரை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அழியாத மை

மராட்டியத்தின் பல்வேறு விமான நிலையங்கள் வந்து இறங்கும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களது கையில் அழியாத மை குத்தப்பட்டு வருகிறது. இனி அழியாத மை குத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு சுகாதார சோதனை மற்றும் அழியாத மை குத்தப்படுவதும் நிறுத்தப்படும் என்றும் அரசு அறிவித்து உள்ளது.

Next Story