கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர்கள் மனு தாக்கல்


கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர்கள் மனு தாக்கல்
x
தினத்தந்தி 14 Oct 2020 9:58 PM GMT (Updated: 14 Oct 2020 9:58 PM GMT)

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த முனிரத்னா தனது பதவியை கடந்த 2019-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். சிரா தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சத்யநாராயணா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து கர்நாடக சட்டசபையில் ராஜராஜேஸ்வரிநகர், சிரா ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஜோதிடப்படி நேற்று நல்ல நாள் என்பதால் முக்கியமான அரசியல் கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குசுமா ரவி நேற்று ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார்.

ஜனதா தளம்(எஸ்)

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். அதேபோல் அதே தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னா மனு தாக்கல் செய்தார். அப்போது துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார்.

அப்போது முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உடனிருந்தார். அதேபோல் சிரா தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் அம்மாஜம்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், அவர் சார்பில் முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா மனுதாக்கல் செய்தார். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.பி.ஜெயச்சந்திரா இன்று (வியாழக்கிழமை) மனு தாக்கல் செய்ய உள்ளார். இதில் சித்தராமையா உள்பட காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

இதன் மூலம் கர்நாடகத்தில் இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். ராஜராஜேஸ்வரி நகர் பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னா மேளதாளங்களுடன் தேர்தல் அலுவலகத்திற்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தேர்தல் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தல் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மற்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மனு தாக்கல் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

Next Story