காஞ்சீபுரத்தில் 6 மாதங்களாக பதுங்கியிருந்த இலங்கையை சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது


காஞ்சீபுரத்தில் 6 மாதங்களாக பதுங்கியிருந்த இலங்கையை சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது
x
தினத்தந்தி 15 Oct 2020 4:48 AM IST (Updated: 15 Oct 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் 6 மாதங்களாக சட்டவிரோதமாக பதுங்கியிருந்த இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர்.

செங்கல்பட்டு,

இலங்கையில் நடந்த பல்வேறு கொலை மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய கட்டகாமினி என்கிற பொன்சேகா அழாகாப்பெரும்மக சுனில் ஜெமினி என்பவரை அந்த நாட்டு போலீசாரும், தமிழக போலீசாரும் தேடி வந்தனர். இவரது பின்னணியிலேயே நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும், பல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. எனவே இலங்கையில் இருந்து தப்பிய கட்டகாமினி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 6 மாதங்களாக சட்டவிரோதமாக பதுங்கி இருந்துள்ளார்.

பெங்களூருவில் சிக்கினான்

இங்கிருந்தபடியே இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தலுடன் கட்ட காமினி நேரடி தொடர்பு வைத்திருந்தார். இதனால் அவருடைய தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். இதனை அறிந்த அவர் காஞ்சீபுரத்தில் இருந்து பெங்களூருக்கு தப்பி சென்றுவிட்டார்.

இதனை அறிந்த காஞ்சீபுரம் கியூ பிரிவு போலீஸ் தனிப்படையினர் தப்பிச்சென்ற கட்டகாமினியை பெங்களூருவில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி காயத்ரிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story