இரும்பு கம்பியால் விவசாயி அடித்து கொலை செல்போனை பறிக்க முயன்ற மர்மநபர்கள் கொடூரச்செயல்


இரும்பு கம்பியால் விவசாயி அடித்து கொலை செல்போனை பறிக்க முயன்ற மர்மநபர்கள் கொடூரச்செயல்
x
தினத்தந்தி 15 Oct 2020 4:51 AM IST (Updated: 15 Oct 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

நடைபயிற்சிக்கு சென்ற விவசாயியை மர்மநபர் கள் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு, செல்போனை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே கோட்டைகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 60). விவசாயி. இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தினந்தோறும் காலையில் கோட்டைகுப்பம்-கட்டுவாய் சாலையில் நடைபயிற்சி செய்து வந்தார். இந்நிலையில், வெளிநாட்டில் வசித்து வரும் இவரது மகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்தைக்கு விலை உயர்ந்த செல்போன் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து, கோட்டைகுப்பம்-கட்டுவாய் சாலையில் நேற்று அந்த விலை உயர்ந்த செல்போனில் பேசிக்கொண்டே நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்து ஒரு முககவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை அவரிடமிருந்து பறிக்க முயன்றுள்ளனர்.

விவசாயி கொலை

ஆனால், செல்போனை விடாமல் பிடித்து மாதவன் அவர்களிடம் போராடியதில், ஆத்திரமடைந்த அந்த மர்மநபர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் விவசாயியை அடித்து தாக்கினர். இதனால் மயங்கி கீழே விழுந்த அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.

அதைத்தொடர்ந்து மயங்கி கிடந்த விவசாயியை அவரது உறவினர்கள் அவரை மீட்டு, சென்னை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை தொடர்பாக விசாரணை செய்தனர். பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story