கயத்தாறு அருகே காலில் விழ வைத்த சம்பவம்: ஆடு மேய்க்கும் தொழிலாளியிடம் கலெக்டர் நேரில் விசாரணை


கயத்தாறு அருகே காலில் விழ வைத்த சம்பவம்: ஆடு மேய்க்கும் தொழிலாளியிடம் கலெக்டர் நேரில் விசாரணை
x
தினத்தந்தி 15 Oct 2020 5:31 AM IST (Updated: 15 Oct 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக ஆடு மேய்க்கும் தொழிலாளியிடம் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் விசாரணை நடத்தினார்.

கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கு, அவரது மகன் சங்கிலிபாண்டி மற்றும் உறவினர்கள் தாக்கினார்கள்.

மேலும் பால்ராஜை காலில் விழ வைத்து அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, சிவசங்கு, சங்கிலிபாண்டி உள்பட 7 பேரை கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாதிக்கப்பட்ட தொழிலாளி பால்ராஜை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.

கலெக்டர் நேரில் விசாரணை

இந்த நிலையில் பால்ராஜ் வீட்டிற்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலையில் சென்றார். அவரிடம் சம்பவம் நடந்தது குறித்து விசாரணை நடத்தினார். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த கட்சி பிரமுகர்கள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கலெக்டரிடம் முறையிட்டனர்.

பால்ராஜ் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா, பசுமை வீடு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு நிவாரண தொகை ஆகியவை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

அவருடன் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.

Next Story