ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டத்தில் தொடரும் சர்வர் பிரச்சினை - ரேஷன் கடையில் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருப்பு


ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டத்தில் தொடரும் சர்வர் பிரச்சினை - ரேஷன் கடையில் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருப்பு
x
தினத்தந்தி 15 Oct 2020 8:53 AM IST (Updated: 15 Oct 2020 8:53 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டத்தில் தொடர்ந்து சர்வர் பிரச்சினை இருப்பதால் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.

விழுப்புரம்,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவினால், பொது வினியோக திட்டம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக புழக்கத்தில் இருந்த ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஆதார் எண் விவரங்களின் அடிப்படையில் மின்னணு ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி தற்போது மின்னணு ரேஷன் கார்டுகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப தமிழகம் முழுவதும் எந்தவொரு ரேஷன் கடையிலும் பெறத்தக்க வகையில் ரேஷன் கார்டுகளின் மின்னணு முறை, மாநில அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக ரேஷன் கடைகளில் பயன்பாட்டில் உள்ள விற்பனை முனைய எந்திரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமலுக்கு வந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பயன்பாட்டில் உள்ள விற்பனை முனைய எந்திரங்கள் மேம்படுத்தப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் கடந்த 5 நாட்களாக ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் அவல நிலை உள்ளது. மேலும் ‘பயோ மெட்ரிக்’ எந்திரம் பயன்படுத்துவதால் ‘சர்வர்’ பிரச்சினையால் மக்களுக்கு உடனுக்குடன் அத்தியாவசிய பொருட்களை விற்பனையாளர்களால் வழங்க முடியவில்லை. பொதுமக்கள் தங்களுடைய விரல்ரேகைகளை வைத்தாலும் சுய விவரங்கள் தெரியவர ‘சர்வர்’ வேலை செய்யாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி ஆதார் ஓடிபி (6 இலக்க எண்) கேட்கும்போது பொதுமக்களின் கையில் செல்போன் இல்லை என்றாலும் பிரச்சினை உள்ளது.

இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளதால் ஒரு நபருக்கு பொருட்களை வழங்குவதற்கு குறைந்தது 20 நிமிடம் வரை ஆகிறது. சில சமயங்களில் ½ மணி நேரமும் ஆகிறது. இவ்வாறு நாள் ஒன்றுக்கு ஒரு ரேஷன் கடையின் மூலம் 30 முதல் 40 பேரின் அட்டைகளுக்கு மட்டுமே பொருட்களை வழங்க முடிகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ரேஷன் கடைகளில், பொதுமக்கள் பல மணி நேரம் கொளுத்தும் வெயிலில் கால்கடுக்க காத்துக்கிடக்கின்றனர். அவ்வாறு காத்துக்கிடந்தும் பெரும்பாலானவர்கள், அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். மீண்டும் அடுத்த நாள் ரேஷன் கடைக்கு சென்றாலும் ‘சர்வர்’ பிரச்சினையால் இதே நிலைமைதான் உள்ளது. இதன் காரணமாக பல மணி நேரமாக காத்திருந்தும் பொருட்கள் கிடைக்காத ஆத்திரத்திலும், சூழ்நிலையை புரிந்துகொள்ளாமலும் பொதுமக்கள், ரேஷன் கடை விற்பனையாளர்களை திட்டி அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த பிரச்சினை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்கள், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களையே பெற்று குடும்பத்தை சமாளித்து வருகின்றனர். இந்த சூழலில் அரசு கொண்டு வந்துள்ள இத்திட்டத்தினால் ஏழை, எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை பெற முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே மின்னணு ரேஷன் கார்டு மூலம் பழைய முறைப்படியே அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அல்லது இத்திட்டத்தில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாமல் உடனுக்குடன் பொருட்களை வழங்குவதற்கு ஏதுவாக எளிமையான வழிமுறைகளை புகுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story